Thursday, June 20, 2019

தேசிய பரீட்சைகளில் : அகில இலங்கை தரப்படுத்தல்கள் கிடையாது

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்  அகில இலங்கை ரீதியில் தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாதென, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
குறித்த பரீட்சை பெறுபேறு பத்திரத்திலும் பரீட்சார்த்தி பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார் அல்லது, பரீட்சையில் சித்தி அடையவில்லை என்று மாத்திரம் குறிப்பிடப்படும் என்பதோடு, தரப்படுத்தல் விபரங்களை பரீட்சை திணைக்களம் வெளியிடாது எனவும், அவர் தெரிவித்தார்.
மிகவும் சிறந்த கல்வித் திட்டத்தை கொண்ட நாடுகள் மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையிலான  தரப்படுத்தல்களை வழங்குவதில்லை. இது மாணவர்களுக்கு எதிர்மறை தாக்கத்தை விளைவிக்கும் என்பதால், அதனை அவர்கள் ஊக்குவிப்பதில்லை எனவும், அவர் தெரிவித்தார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகள் அதிக போட்டித்தன்மையை கொண்டுள்ளதால், பல மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்கள் தாங்கள் கொண்டுள்ள ஆற்றலின் அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் தரப்படுத்தல் அவசியமற்றது. ஆகையால், இதனை அவதானிப்பதற்காக ஏற்கெனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரிந்துரைகளை குறித்த குழு மேற்கொண்டவுடன், எதிர்காலத்தில் மாணவர்களை தரப்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: