Monday, June 10, 2019

கருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்

கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நேற்று (09) மாலை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அக்கரைப்பற்று பிராந்திய பிரதம பொறியியலாளர் எம்.பி அலியார் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்ற "ரண் மாவத்" வீதி அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் ; 

முஸ்லிம் பெண்கள் 03 பிள்ளைகள் பெற்றதன் பிறகு அவர்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.  இதில் 03 பிள்ளைகள் பெற்றதன் பிறகு அவர்களிடத்தில் உடல் நிலையைக் காரணம் காட்டி கருத்தடை செய்துள்ளனர். இந்த விடயம் அண்மையில் இடம்பெற்ற மகப்பேற்று நிபுணர்களுடனான சந்திப்பின் போதே இந்த திடுக்கிடும் தகவல்  தெரியவந்துள்ளது. மேலும் இவ்விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களிடத்தில் பேசியிருந்தோம். விரைவில் இதன் முழு விபரங்களை  வெளியிடுவதுடன், இது ஒரு சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

எனவே இவ்விடயம் பற்றி அரச மருத்துவ சங்கம், மகப்பேற்று வைத்தியர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கிய சங்கத்தினரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம். எனவே இது போன்ற இன்னும் பல பிரச்சினைகள் முஸ்லிம் மக்களுக்கு நடைபெறுவதுடன் தற்போது முஸ்லிம் கர்பிணித் தாய்மார்களை  பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

அதேபோன்று வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அவர் அவ்வாறு பெண்களுக்கு கருத்தடை செய்திருந்தால் இவருடன் சேர்த்து 10 பேரை கைது செய்ய வேண்டும். இவர் மட்டும் தனியாக சத்திர சிகிச்சை செய்ய முடியாது. இது திட்டமிட்டு செய்யப்பட சதி நடவடிக்கையாகும். 

மேலும் அண்மையில் மகா சங்கத்தினர் அமைச்சுக்களை மீள பொறுப்பேற்குமாறு அறிவித்திருந்தனர். இது பற்றி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவதாக தீர்மானித்ததிற்கிணங்க பிரதமர், எதிர்க்கட்சி  தலைவர் ஆகியோரை சந்தித்தோம். இன்னும் முக்கியமான கட்சி தலைவர்களையும், அரபுநாட்டு தூதுவர்களையும், மேற்கு நாடுகளின் தூதுவர்களையும் சந்திக்கவுள்ளோம். 

கடந்த 03 ம் திகதி எமது அமைச்சுப்பதவிகளை சமூகத்திற்காகவே துறந்தோம்.  அநேக பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி மிகவும் கவலையுடன் இருக்கின்றனர். யார் மீது குற்றம் சுமத்தப்படுகின்றதோ அவர்களை உடனடியாக விசாரணை செய்து தீர்ப்பினை வழங்க வேண்டும். 

மேலும்  அண்மையில் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்த சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் நன்மை கருதியும், வட கிழக்கிற்கு வெளியே வசிக்கும் முஸ்லிம்களின் நன்மை கருதியும் எமது பதவிகளை துறந்தோம். அவர்கள் நாளை என்ன நடக்கும் என்ற பீதியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவர்கள் நிம்மதியாக வாழவேண்டும். ஏற்கனவே அடிபட்டு நொந்து போயுள்ள இந்த சமூகத்தை பாதுகாப்பது எமது கடமையாகும். எனவேதான் இந்த விடயங்கள் பற்றியும், தற்போது நிலவும் பிரச்சினைகள் பற்றியும் பிரதம மந்திரியிடம் கூறினோம். 

எவ்வளவு விரைவாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் மற்றும் ஏனையோர் விடயத்தில் உடனடி தீர்மானம் எடுக்க வேண்டும். இந்த நிலை தொடர்வதனை அனுமதிக்க முடியாது. இந்த நிலைக்கு முடிவு கட்டவில்லையென்றால் நாளை இலங்கையின் முக்கியமான நகரங்கள் ஒவ்வொன்றிலும் பௌத்த பிக்குகள் உண்ணாவிரதம் இருந்து நாட்டை சின்னா பின்னமாக்குவதோடு, தொடர்ந்தும் முஸ்லிம் மக்களை பீதியில் வாழ வைப்பதற்கான வழிவகைகளை செய்துவிடுவார்கள். எனவே இந்த பிரச்சினையில் உரிய அமைச்சருக்கு எதிராக விசாரணை செய்து முடிவை அறிவிக்கும் வரைக்கும் நாம் யாரும் அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம். 

இது இவ்வாறு இருக்கும் போது கடந்த மாதம் சுமார் 2500 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 700 பேர்களை தவிர ஏனையோர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக பாடுபட்ட சட்டத்தரணிகள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். மேலும் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளவர்களின் 'பி"  B அறிக்கைகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் மிகுதியாகவுள்ள ஏனையோர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். 

தீவிரவாதற்கும், சஹ்ரானுக்கு துணைபோனவர்களையும் விடுதலை செய்வதற்கு நாம் தயாரில்லை. வாள்கள், கத்திகள் என்பன தற்பாதுகாப்பு ஆயுதங்களும், தேவைக்கு பயன்படும் ஆயுதங்களே அவை. இருந்த போதும் அவைகளை வைத்திருந்ததற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

(சுலைமான் றாபி) 

Author: verified_user

0 comments: