Monday, June 10, 2019

முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடங்களுக்கு புதிய பதில் அமைச்சர்கள் நியமனம் பெற்றனர்


முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹஸிம் ஆகியோர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளுக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பதில் கடமைபுரியும் அமைச்சர்கள் 3 பேர் நியமிக்கப்பட்டனர்.

இதற்கமைய, நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் பிரதியமைச்சர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் விருத்தி பதில் கடமைபுரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், பதவியிலிருந்து விலகிய, முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீமின் பொறுப்பில் இருந்த அஞ்சல் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் பதில் கடமை புரிவதற்காக இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.

Author: verified_user

0 comments: