Thursday, June 6, 2019

ஜனாதிபதி மைத்திரிபால என்மீது நம்பிக்கை வைத்து ஆளுநர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் - முஸம்மில்

மேல் மாகாணத்தில் உள்ள 58 இலட்சம் மக்களுக்கும் பொறுப்புடன் சேவையாற்ற தன்னுடன் ஒத்துழைக்குமாறு மாகாணத்தில் உள்ள 86 ஆயிரம் அரச ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த மேல் மாகாண ஆளுநர் ஏ.கே.எம். முஸம்மில் ஆளுநர் பதவியை கிரீடமாக சுமக்கப் போவதில்லை எனவும் மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் இயங்கப் போவதாகவும் தெரிவித்தார். 

தேசத்துக்கான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் பிரதான இடமாக மேல் மாகாணம் அமையப்பெற்றிருப்பதால் பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். அதனைச் சவாலாக ஏற்று பணிபுரிய உறுதிபூணுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

மேல் மாகாணத்தின் ஒன்பதாவது ஆளுநராக பதவியேற்றுள்ள ஏ.ஜே.எம். முஸம்மில் நேற்றுக்காலை ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

சம்பிரதாயபூர்வமாக தனது அலுவலகத்தில் முதல் ஆவணத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :- 

ஜனாதிபதி மைத்திரிபால சிறினே என் மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். நியமனக் கடிதத்தை வழங்கும்போது ஜனாதிபதி எனக்கு வழங்கிய அறிவுரை இப்பதவியை கிரீடமாக சுமக்க வேண்டாம் என்பதாகும். அதனைத்தான் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளேன். இந்த மாகாணத்தின் முதலாவது ஆளுநர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சர்வானந்தா ஆவார். நான் 9வது ஆளுநராக பதவியேற்றுள்ளேன். நாட்டின் பொருளாதாரத்தில் 60 சதவீதம் தங்கியுள்ள பிரதேசமாக இந்த மேல் மாகாணம் காணப்படுகின்றது. தேசததின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் கேந்திர நிலையமாகவும் மேல் மாகாணம் காணப்படுகின்றது. 

முன்னர் நான் வகித்த பதவிகளைவிட இந்த ஆளுநர் பதவி மூலம் நிறையப் பணியாற்ற வேண்டி வரலாம். பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதை நான் அறிவேன். அதனை சவாலாக ஏற்றுச் செயற்பட உறுதிபூண்டுள்ளேன். அரசியல் கட்சி, இன, மத, மொழி வேறுபாடின்றி சகலருக்கும் ஒரே விதமாகவே நடந்துகொள்வேன். இன்று நான் பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்றேன். 

எமது நாடு இன்று பயணிக்கும் பாதை வேதனை தருகின்றது. இனவாதம் நாட்டை அழிவின் பக்கம் இட்டுச் சென்றுகொண்டிருக்கின்றது. சிலர் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு நாட்டை குட்டிச்சுவராக்க முனைகின்றனர். இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகளும் செயற்பட்டு வருகின்றன. முதலில் நாம் மனிதராக சிந்திக்க வேண்டும். பின்னர்தான் மதம், கட்சி அரசியல், மொழி, இனம் எல்லாம் உயிர்த்த ஞாயிறு சம்பவங்கள் அனுமதிக்க முடியாதவையாகும். அதனை இரண்டு வாரங்களுக்குள் கட்டுப்படுத்த ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுத்தார். இதற்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைத்தனர். இதனை எவரும் மறந்துவிடக்கூடாது. 

அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களுக்கான பணியை எந்தச் சூழ்நிலையிலும் தள்ளிப்போட வேண்டாம். மக்களுக்கான தீர்வுகளை குறுகிய காலத்துக்குள் செய்து கொடுக்க வேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டிராமல் உடனடியாக செயலில் இறங்குவோம். 

நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், மேல் மாகாண சபை செயலாளர் பிரதீப் யசரத்ன, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, கோட்டே மாநகர முதல்வர் மதுர விதான ஆளுநரின் பாரியார் பெரோஸா முஸம்மில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

(எம். ஏ. எம். நிலாம்)

Author: verified_user

0 comments: