Thursday, June 6, 2019

தோண்டி எடுக்கப்படவுள்ள பயங்கரவாதிகளின் சடலங்கள்!


சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் நாளைய தினம் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்பட உள்ளதாக அம்பாறை பிரதேசத்திற்குப் பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.



அம்பாறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.



கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருது 'சுனாமி கிராமத்தில்' உள்ள வீடு ஒன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் பலியாகினர்.



குறித்த வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும், 6 ஆண்களினதும், 3 பெண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.



பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.



குறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பெரியோர்களின் சடலங்கள், கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில், இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யய்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: