Thursday, May 16, 2019

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்!

'பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் பூதமல்ல' என்கிறார் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்- ரஞ்சித் மத்துமபண்டார.
கேள்வி: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களையடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியுமா?
பதில்: தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரத்துக்குள் எமது முப்படையினரும் பொலிஸாரும் நாட்டின் பாதுகாப்பை பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார்கள். தற்போது நாடு சுமுகநிலைக்கு திரும்பியுள்ளதாக முப்படைத் தளபதிகளும் உறுதி வழங்கியுள்ளார்கள்.
கேள்வி: தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பான தகவல்களை பெற்றிருந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகும். அவ்வாறென்றால் அந்தத் தகவல்கள் யாருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன?
பதில்: சாதாரணமாக பொறுப்பானவர்களுக்கு அதனை அறியத் தருவார்கள். நான் சட்டம் ஒழுங்குக்கான அமைச்சராக இருந்த வேளையில் தேவையான தகவல்களை எனக்கு பெற்றுக் கொடுத்தார்கள். புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டவர்களுக்கு தகவல்களை வழங்கியுள்ளார்கள். அதனால்தான் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கேள்வி: தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதனை தடுக்க முயலாதது நாட்டின் துர்ப்பாக்கியமல்லவா?
பதில்: நிச்சயமாக... தற்பொது பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியாவார். அவருக்கு வேலைப்பளு அதிகமாகும். அதனால்தான் பாதுகாப்பு தொடர்பான முழுநேர அமைச்சரொருவர் இருக்க வேண்டும். உதாரணமாக ஜயவர்தன காலத்தில் பாதுகாப்புப் பிரிவுக்கு லலித் அத்துலத் முதலி பொறுப்பாக இருந்தார். பிரேமதாச காலத்தில் ரஞ்சன் விஜேரத்ன, சந்திரிகா காலத்தில் ஜெனரல் அனுருத்த ரசத்வத்தை ஆகியோர் பொறுப்பாக இருந்தார்கள்.அவ்வாறு ஒருவர் இல்லாமையே இவ்வாறான நிலைமை ஏற்படக் காரணமாகும்.
கேள்வி: பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?
பதில்: அன்றைய யுத்த காலத்திலும் குண்டுகள் வெடித்தன.இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அது மாத்திரமன்றி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.ஆனால் அன்றைய வேளையில் பாடசாலைகள் நடத்தப்பட்டன. இன்று தற்போது வதந்திகள் காரணமாக மக்கள் பயத்துடன் காணப்படுகின்றார்கள்.
கேள்வி: எந்தவொரு அமைச்சரும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை என சில இணைய தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அமைச்சர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்தால் முன்மாதிரியாக திகழலாம் அல்லவா?
பதில்: ஆம் அது நல்லது. அப்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.பாதுகாப்புப் பிரிவினர் மாத்திரமல்ல, தற்போது அனைவரும் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். முப்பது ஆண்டுகள் யுத்தம் இடம்பெற்ற பொதும் நாங்கள் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பினோம்.
கேள்வி: இந்தத் தாக்குதல் காரணமாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முனைகின்றார்கள் என அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றார்கள் அல்லவா?
பதில்: சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கு முன்னர் ஏன் பயப்பட வேண்டும்?இந்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து கலந்துரையாடி திருத்த வேண்டிய இடங்களை திருத்தியே சட்டம் நிறைவேற்றப்படும். அதனை பாதகமாக உருவகப்படுத்தவது தவறாகும்.
கேள்வி: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பலம் பொருந்திய நாடுகளின் சூழ்ச்சியென சிலர் கூறுகின்றனர். நீங்கள் அதை ஒப்புக் கொள்கின்றீர்களா?
பதில்: ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வெளிநாட்டு சூழ்ச்சி என கூக்குரலிடும் அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள். இந்த தாக்குதல் தொடர்பாகவும் அதன் பின்னரும் வெளிநாட்டு உளவு சேவைகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. நாம் முப்பது வருட யுத்தத்தில் ஈடுபட்டவர்கள். அன்று எல்.ரி.ரி.ஈயினர் கப்பல் கப்பலாக ஆயுதங்களைக் கொண்டு வந்த போது அது பற்றி உளவுத் தகவல்களைத் தெரிவித்தது அந்நிய நாடுகள்தான். அதன் மூலம் அந்தக் கப்பல்களை கடலிலேயே அழிக்க முடிந்தது. இவர்களுக்கு கடந்தகாலம் மறந்து விட்டது. கிணற்றுத் தவளைகள் போல் பேசுகின்றார்கள்.
கேள்வி: இந்த தீவிரவாத மத அணியினருடன் சில நீதிபதிகளுககும் தொடர்புள்ளதாக ஆளுநர் அஸாத்சாலி கூறியுள்ளார். அது பற்றிய உங்களது கருத்தென்ன?
பதில்: அஸாத் சாலி ஜனாதிபதியுடன் நெருக்கமாக நடவடிக்கையில் ஈடுபடுபவர். அவ்வாறான ஒருவர் இவ்வாறு செய்திகளை ஊடகங்களுக்கு கூறிக் கொண்டிருக்காமல் ஜனாதிபதியிடமே கூறி அவர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா?
கேள்வி: நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் எண்ணம் உள்ளதா?
பதில்: தேசிய அரசாங்கமொன்றை அமைக்க தேசிய ஒப்புதல் இருக்க வேண்டும். இன ரீதியான இத்தாக்குதலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை அவதானித்தோம். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தயாராக இருந்த அபேட்சகர் ஒருவர் இந்த அனர்த்தம் நடந்தவுடனேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறினார். இறந்த உடல்கள் மீது மேற்கொள்ளப்படும் இந்த அரசியலை நாள் அருவருப்புடன் கண்டிக்கின்றேன். நாட்டிற்கு,இனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள வேளையில் தனது சொந்த அரசியல் இலாபத்தை தேடுபவர் மக்கள் விரோத சந்தர்ப்பவாதியாவார். இவ்வாறானவர்களுக்கு மக்கள் எதிர்காலத்தில் நல்ல பாடம் கற்பிப்பார்கள்.

Author: verified_user

0 comments: