Thursday, May 16, 2019

வாக்குறுதிகளை நம்ப, முஸ்லிம்கள் தயாரில்லை

ஏப்ரல் குண்டுத் தாக்குதல்களின் பின்னரான நாட்டின் நிலைமைகள் புதிய வடிவத்தை எடுத்துள்ளன. முஸ்லிம்கள் மீதான கோபம் வன்முறையாக மாற்றம் பெற்றுள்ளது. அதன் விளைவுகளையே கடந்த சில நாட்களாக நாம் நீர்கொழும்பு, சிலாபம், குருநாகல் மற்றும் மினுவாங்கொடை போன்ற பகுதிகளில் கண்டோம். இந்த வன்முறைகளின் அடுத்த கட்டம் என்ன? அது எங்கு போய் முடியும் என்பதை இப்போதைக்கு எதிர்வு கூற முடியாதுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் பிரசன்னத்துக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. இச் சம்பவங்களில் முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 27 பள்ளிவாசல்கள், ஒரு அரபுக் கல்லூரி உட்பட நூற்றுக் கணக்கான வியாபாரஸ்தலங்களும் வீடுகளும் வாகனங்களும் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதே விதமான இனவாத, மதவாத வன்முறைகளை  2012 முதலே எதிர்கொண்டு வருகின்றனர். அவற்றின் வடுக்களை அளுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் இன்றும் காணலாம். அதன் தொடரிலேயே இந்த வார வன்முறைகளும் நடந்து முடிந்துள்ளன.

கடந்த காலங்களில் அற்ப காரணங்களுக்காக முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு, ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தக்க காரணமாக அமைந்துவிட்டது என்பது துரதிஷ்டவசமானதாகும்.

ஏப்ரல் 21 தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள்தான் என்பது தெரிய வந்தது முதலே, முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கமைய கடந்த 5 ஆம் திகதி நீர்கொழும்பில் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. தற்போது அவை நாட்டின் பல பகுதிகளையும் வியாபித்துள்ளன.

இந்த இடத்தில் முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் கடந்த காலங்களைப் போலவே செயற்றிறனற்றுப் போனமை கவலைக்குரியதாகும். அவசர காலச் சட்டத்தின் கீழ் வன்முறைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டுக் கலைப்பதற்கான அதிகாரம் இருந்தும் கூட அதனைச் செய்யவில்லை. வத்தளையில் காரை நிறுத்தாது சென்ற சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினரால், பட்டப்பகலில் ஆயுதங்களுடன் வெறியாட்டம் ஆடிய குண்டர்களைச் சுட முடியவில்லை. மாறாக முஸ்லிம்களின் பள்ளிகளை, வீடுகளை தாக்கவிட்டு பொலிசாரும் படையினரும் வேடிக்கை பார்த்தனர் என்பதை பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் பகிரங்கமாகக் கூறுகின்றனர். இதற்கான வீடியோ ஆதாரங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதல்களினால் இந்த நாட்டில் வாழுகின்ற சகலரும் ஆத்திரமுற்றதை நாம் அறிவோம். முஸ்லிம்களும்தான் ஆத்திரப்பட்டார்கள்.வெட்கப்பட்டார்கள். தம்மால் முடிந்த வகையில் இந்தச் செயலைக் கண்டித்தார்கள். இவ்வாறான நிலையில் அப்பாவி முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இவ்வாறான வன்முறைகளைக் கட்டவிழ்ப்பதை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் பின்னணியில் அரசியல் மறைகரங்கள் உள்ளன என்பதும் இப்போது வெளிச்சமாகியுள்ளது.

ஆனாலும் வழக்கம்போல நஷ்டயீடு தருகிறோம், குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம், இதன்பிறகு இப்படியெல்லாம் நடக்கவிடாது என ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் ஆறுதல் கூறுவார்கள். ஆனால் இந்த வாக்குறுதிகளை நம்புவதற்கு முஸ்லிம்கள் மக்கள் ஒருபோதும் தயாரில்லை.
-Vidivelli

Author: verified_user

0 comments: