Tuesday, May 21, 2019

பாலைவன பூமியில் விவசாய புரட்சி - ஐக்கிய அரபு ராச்சியத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்!

பாலைவனம் நிறைந்த ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர் மழை கிடையாது, பெரிய ஆறுகள் கிடையாது ஆனாலும் ஆண்டுதோறும் விவசாயம் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் இயற்கை விவசாய பண்ணைகள் 59 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பெரும்பாலும் பாலைவன பூமிதான். ஆனால், இங்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேயரில் விவசாயம் செய்யப்படுகிறது என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். 1971ம் ஆண்டில் 4000 விவசாயப் பண்ணைகள் இருந்தன. இது 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 35,704 என அபரிமிதமாக வளர்ந்த நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரொசல் , கைமா, அல் அய்ன், புஜைரா போன்ற பகுதிகளின் விவசாய பண்ணைகளில் கத்தரிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, மிளகாய், பீட்ரூட் மற்றும் கிழங்கு என பல்வேறு வகை காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. பாலைவன பகுதிகள் விவசாயத்திற்கு கடினமானவை என்பதால், தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. இதனை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு விவசாய‌ வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக விதைகள், உரங்கள், கருவிகள் ஆகியவை மானிய விலையில் அளிக்கப்படுகிறது.


மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த 6 மாதங்களில் இயற்கை விவசாய பண்ணைகள் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இயற்கை விளைப் பொருட்கள் வகைகள் 2018 காலாண்டில் 1,240 ஆக இருந்து. 2019 காலாண்டில் 2,356 ஆக உயர்ந்துள்ளது. இது 89 சதவீத வளர்ச்சியாகும். இன்றும் 90 சதவீத பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இயற்கை விவசாய பண்ணைகளின் உற்பத்தி அதிகரிப்பதின் மூலம் 40 சதவீதம் வரை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது. பாலைவன பூமியில் நடக்கும் இந்த விவசாயப் புரட்சி பல்வேறு நாடுகளில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: