Wednesday, May 1, 2019

ஃபோனி சூறாவளி குறித்து வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!


ஃபோனி சூறாவளி நாட்டுக்கு அண்மித்த பகுதியில் இருந்து நகர்ந்து செல்வதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும், அதன் தாக்கத்தினால், கடும் காற்று மற்றும் கடும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் நிலவும் என அந்த நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடா கடற்பரப்பில் நாளை முற்பகல் முதல், மணிக்கு 165 முதல் 175 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசுவதுடன், இடையிடையே 210 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக, மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் மறு அறிவித்தல் வரை தமது நடவடிக்கைகளை கைவிடுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை ,  ஃபோனி புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று எதிர்வரும் 48 மணி நேரத்தில் இந்தியாவின் ஒடிசா கடற்கரை நெருங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வானிலை மையத்தால் ஒடிசா மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஒடிசா அரசாங்கம் நாளை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஃபோனி புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்க கடலோர மாவட்டங்களில் தேர்தல் விதிமுறைகளை தளர்த்தி தேர்தல்கள் ஆணைக்குழுவும் உத்தரவிட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Author: verified_user

0 comments: