Saturday, January 5, 2019

தொழில்வாய்ப்பு ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும்போது

அதிகமான வாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும்படி வேண்டப்படுகிறது. இதன்போது நாம் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது நமது மின்னஞ்சல் அனுப்பப்படும் முறைகளைக்கொண்டும் விண்ணப்பதாரிகள் பரிசோதிக்கப்படுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

1. நம்மிடம் Update பண்ணப்பட்ட நமது சுயவிபரக்கோவை (எம்.எஸ். வேர்ட் வடிவில் இருத்தல் நல்லது அத்தோடு அதன் PDF வடிவமும்) கைவசம் இருக்கவேண்டும்.
2. சுருக்கமான Covering Letter எழுதப்படல் வேண்டும். இதனை நீங்கள் மின்னஞ்சலின் தட்டச்சுப் பகுதியில் எழுத வேண்டும். இது ஒரு முறைசார் கடிதமொன்றின் (Formal letter) அம்சங்களை உள்ளடக்கி சுருக்கமாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும். (கவனிக்க சுருக்கமாக)
3. மின்னஞ்சலின் Subject பகுதியில் விண்ணப்பிக்கும் தொழிலில் தலைப்பு சுட்டிக்காட்டப்பட வேண்டும் (உதாரணம் : Application for the post of IT coordinator)
4. விண்ணப்பிக்கமுன் உங்கள் சுயவிபரக்கோவை மின்ன்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை இருமுறை சரிபார்க்கவும்.
5. தொழிலுக்காக விண்ணப்பிக்கும்போது உங்கள் விண்ணப்பத்தை Cc அல்லது Bcc செய்வது தவிர்க்கப்படவேண்டியது.
6. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களுக்கு ஒரே மின்னஞ்சல் தகவலூடாக விண்ணப்பிப்பதை முற்றாக தவிர்க்கவும்,
7. தபால் மூலம் மட்டும் விண்ணப்பிக்கும்படி கோரப்படும் தொழில்வாய்ப்புக்களுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டாம்.
8. விண்ணப்பித்தபின் நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து விண்ணப்பித்தது பற்றியோ சரியாக மின்னஞ்சல் வந்து சேர்ந்து விட்டதா என்பது பற்றியோ வினவ வேண்டாம். (இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுமாயினும், இதனை தவிர்ப்பதே நல்லது)
9. விண்ணப்பித்த மின்னஞ்சல் பிரதிகளை அழிக்க வேண்டாம்.
10. இறுதித்திகதிக்குப் பின்னர் விண்ணப்பிப்பதாயின், நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து விண்ணப்பிக்க முடியுமா? என்று கேட்டுவிட்டு விண்ணப்பிக்கவும்.
11. தொழில்வாய்ப்புகளுக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தபிறகு உங்கள் மின்னஞ்சலை அடிக்கடி சர்பார்க்கவும். சிலவேளை நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக்கள் மின்னஞ்சல் மூலம் கோரப்படலாம்.
12. தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் மின்னஞ்சல் முகவரியை சுருக்கமாகவும், ஒழுக்கமான பெயரிலும் உருவாக்கி, பயன்படுத்துங்கள். (உதாரணம் :- KumarKholicool1989@gmail.com போன்ற பெயர்களை தவிர்க்கவேண்டும். Kumar1989@gmail.com என்றோ அல்லது இதுபோன்றோ உருவாக்குவது நல்லது).

மேற்படி விடயங்களில் கவனம் செலுத்தி உங்கள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் செய்வதன் மூலம் உங்களுக்கான தொழில்வாய்ப்பை விரைவாக அடைந்துகொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்.

எப். எச். ஏ. ஷிப்லி
சிரேஷ்ட விரிவுரையாளர்
தென்கிழக்கு பல்கலைக்கழகம்

Author: verified_user

0 comments: