Monday, December 17, 2018

புதிய அமைச்சரவை இன்றில்லை எதிர்வரும் புதன்கிழமையே சாத்தியம்? 48 மணி நேர அவகாசம் கோரியுள்ளது UNP.

புதிய அமைச்சரவைக்கான நியமனங்கள் இன்றைய தினம் (17) இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவைப் பதவிகள் குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னரேயே நியமனங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.

நேற்றைய தினம் (16) பிரதமர் நியமனம் இடம்பெற்றதன் பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெறவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், அடுத்த 48 மணித்தியாலத்துக்குள் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்தில் கபினட் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த 30 இல் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படவும் வேண்டும்.கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தவும் வேண்டியுள்ளது.

அது மட்டுமல்லாது, அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்கு எதிரணியிலிருந்து உறுப்பினர்களை பெற்றுக் கொள்வதற்காக விலைகொடுக்க வேண்டிய அமைச்சுப் பதவிகளும் உள்ளன. இதுபோக, கட்சியில் பின்னாசன எம்.பி.க்கள் இழந்த பிரதமர் பதவியை பெற்றெடுப்பதற்கு உழைத்த நன்றிக்கடனுக்காக பகிர்ந்தளிக்க வேண்டியவைகளும் உள்ளன.
இவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே அதிக கால அவகாசம் தேவைப்படுகின்றது என்பது மட்டுமே உண்மையாகலாம்.

ஆக எதிர்வரும் புதன்கிழமைதான் புதிய அமைச்சரவை சத்தியப் பிராமணம் செய்யும் சாத்தியம் தென்படுகின்றது.

Author: verified_user

0 comments: