Monday, May 28, 2018

கடும் மழை இன்று முதல் குறைவடையும்

நாட்டின் எட்டு மாவட்டங்களில் இதுவரை தொடர்ந்த கடும் மழை இன்று முதல் குறைவடையவுள்ளது. எனினும், எதிர்வரும் சில நாட்களுக்கு மழைபெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  
வங்காள விரிகுடாவில் தென் மேல் பருவக்காற்று தோன்றியிருப்பதுடன், இது இலங்கைக்கு மேல் பரவியுள்ளது. இதனால் தற்பொழுது பெய்துவரும் மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சாதாரணமான மழைவீழ்ச்சி காணப்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும். மழைபெய்யும்போது தற்காலிகமாக கடும் காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கோரப்படுகின்றனர்.

உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை குறைந்திருப்பதால் பல பகுதிகளில் வெ ள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது.  
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ, நிலையம் தெரிவித்துள்ளது.  
அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. வெ ள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 12 பேர் உயிரிழந்திருப்பதுடன், மின்னல் தாக்கத்தினால் ஐவரும், மண்சரிவில் 3 பேரும், காற்றினால் 2 பேருமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.  
வெள்ளப் பெருக்கினால் 20 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெ ள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 519 குடும்பங்கள் 339 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நிவாரணங்களை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் வடியத் தொடங்கியதும் குடிநீர் கிணறுகள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.  
ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளபோதும், களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் சில பகுதிகளில் வெ ள்ள அபாய கட்டத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
கட்டட ஆய்வு நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.  
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தென்மேல் பருவப்பெயர்ச்சி காற்றின் காரணமாக மழை வீழ்ச்சி குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவ்வப்போது கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  
நாடு முழுவதிலும் இதுவரை 118 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதுடன் 5,073 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளன. இழப்பீடுகள் குறித்த சேத மதிப்பீடுகளை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மேற்கொண்டுள்ளது.  
வெள்ளப் பாதிப்பு இடங்களில் கடற்படையினரின் 49 படகுகளும், பொலிஸாரின் 59 படகுகளும், 50ற்கும் அதிகமான பொலிஸ் கட்டுமரங்களும் மீட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. விமனாப்படையின் 7 ஹெலிகொப்டர்கள் வான்வழியாக பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருவதுடன், வெள்ளத்தில் சிக்குண்டிருப்பவர்களுக்கான நிவாரணங்களையும் வழங்கி வருகின்றன.  
உடனடி நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கம் 43.35 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 21 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமது வீடுகளில் உடனடியாக மீளக் குடியமர்வதற்கு தலா 10 ஆயிரம் ரூபா முற்பணம் கொடுக்கப்படவுள்ளது.  
(மகேஸ்வரன் பிரசாத்) source -  Thinakaran 

Author: verified_user

0 comments: