Monday, May 28, 2018

அனர்த்தத்தில் பாதிப்புற்ற அனைவருக்கும் நஷ்டஈடு


சட்ட சிக்கல்களை பொருட்படுத்த வேண்டாம்; உரிய அதிகாரிகளுக்கு அரசாங்கம் பணிப்பு
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் சட்டபூர்வ குடியிருப்பாளர்களா என்பது தொடர்பில் ஆராயாமல் அனைவருக்கும் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
புத்தளம் மாவட்டத்தல் நிலவும் அனர்த்த நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக நேற்று அங்கு விஜயம் செய்த அமைச்சர்  துமிந்த திசாநாயக்க மஹாவெவ பிரதேச செயலாளர் காரியாலயத்தில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.   இங்கு அவர் மேலும் தெரிவிக்ைகயில்,  கடந்த 21ம் திகதியிலிருந்து எதிர்வரும் 3ம் திகதி வரையான காலப்பகுதியை அனர்த்தத்துக்கு முன்னான ஆயத்தம் என்னும் நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தி வருகிறோம். ஆனால் அந்நிகழ்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர் நாம் அனர்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாம் எந்த நேரத்திலும் அனர்த்தம் ஏற்படுமென தயாராக இருந்தோம். கடந்த காலங்களில் வெள்ளத்தால் பாதிப்புற்ற இடங்களை சென்றடைய சில நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் இம்முறை அதிகாரிகள் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் அந்த பிரதேசங்களுக்கு சென்றார்கள். பொலிஸார், இராணுவத்தினர், கடற் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். தேவையேற்படின் உதவிகளை வழங்க விமானப்படையினரும் தயாராக இருந்தார்கள். அதனால் தான் பாரிய வெள்ளம் ஏற்பட்டாலும் சிறிதளவே பாதிப்பு ஏற்பட்டது.
இம்முறை வெள்ளம் காரணமாக 21 மரணங்கள் சம்பவித்துள்ளன. அவற்றில் அநேகமானவை கவனயீனத்தால் இடம்பெற்றவையாகும். மாதம்பை பொலிஸ் அதிகாரியொருவர் வெள்ளத்தில் சிக்கியிருந்த குடும்பமொன்றை மீட்கச்சென்று அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவ் அதிகாரியின் குடும்பத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக  மேலும் நிதி தேவைப்படுமானால் அரசாங்கம் அதனைப் பெற்றுக்கொடுக்க  தயாராகவுள்ளது.
வெள்ள அனர்த்தம் குறைந்துள்ள பகுதிகளில் பாதிப்புக்குள்ளான  சகல வீடுகள், பாலங்கள், கால்வாய்கள், வீதிகள் உட்பட அனைத்தும் அபிவிருத்தி  செய்யப்படும்.  சேதம் தொடர்பான மதிப்பீடுகளை  அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளரூடாக  மாவட்டச் செயலாளர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  
இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கடமையிலுள்ள கிராம சேவை  உத்தியோகத்தர்களுக்கு தொலைபேசி கொடுப்பனவாக 500 ரூபாவை வழங்குவதற்கு  தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  
எல்லாக் காலங்களிலும் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் களனி  பிரதேசத்திலுள்ள 1000 குடும்பங்கள் தொடர்பில் நிரந்தரமான வேலைத்  திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும்  தெரிவித்தார்.  
அனர்த்தங்கள் இடம்பெறும் பிரதேசங்களிலிருந்து முன்னேற்பாடாக  அப்பகுதி மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.  எவ்வாறெனினும் எந்தவொரு பிரதேசத்திலும் அனர்த்தங்கள் இடம்பெறும் என  தெரிந்தால் அங்கு மக்கள் வசிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.  
பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருந்த மக்கள் வெள்ள நிலை  தணிந்துள்ளதால் மீண்டும் தனது சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.  அதேபோன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவு  வழங்கவும் முகாம்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ளது.  
வெள்ளத்தினால் பாதிப்புற்ற வீடுகளுக்கு ஆகக் கூடியது 20  இலட்சம் ரூபா காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை பாதிப்புகள்  தொடர்பான மதிப்பீடுகள் கிடைக்காததால் இப்போதைக்கு அதனை வழங்க முடியாது.  இதற்கிணங்க மேற்படி மதிப்பீடுகள் நிறைவு பெறும் வரை பாதிக்கப்பட்ட சுமார்  பத்தாயிரம் வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கும் நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  
இதற்கிணங்க அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ள 20 மாவட்டங்களுக்காக  39 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

Author: verified_user

0 comments: