Thursday, May 17, 2018

நாணய பெறுமதி வீழ்ச்சி, ஓரிரு வாரங்களில் சீராகும்

நாட்டில் அண்மைக் காலமாகக் காணப்பட்டுவரும் நாணய பெறுமதியின் வீழ்ச்சி அடுத்த ஓரிரு வாரங்களுக்கிடையில் சீராகிவிடும். அமெரிக்காவின் பொரு ளாதாரம் வலுவடையத் தொடங்கியுள்ளதால் இது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு பலம் சேர்ப்பதாகக் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று தெரிவித்தார்.

இலங்கையில் கல்விக்கும், சுகாதாரத்துக்குமே கூடுதல் நிதியொதுக்கப்படுவதாகவும் மக்களின் வாழ்வாதாரம் மேலோங்கும் போதே நாடு செழிப்பானதாக மாற்றம் பெறும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சர்வதேச தாதியர் தின நிகழ்வுநேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் இங்கு தொடர்ந்து பேசும் போது-

அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை கொடுக்கின்றது. மக்கள் சுகதேகிகளாக வாழ்ந்தால் மட்டுமே நாடு வளம்பெற முடியும். இதனைக் கருத்திற்கொண்டே ,அரசாங்கம் இந்த வருட வரவு -செலவுத் திட்டத்தில் 25 மில்லியன் ரூபாவையும், வெளிநாட்டு உதவியாக இதனைப் போன்ற இரண்டு மடங்கும் ஒதுக்கியுள்ளது. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கே இந்த முழுப்பணமும் செலவிடப்படும்.

சுகாதார அமைச்சு மூலமாக மாகாண சுகாதார அமைச்சுக்களுக்கு நிதி பெற்றுக்கொடுக்கப்படுகிறது. மாகாண சபை மூலமும், மாகாண சுகாதார அமைச்சுக்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படுகின்றது. அத்துடன் உயர் கல்வி அமைச்சினூடாக மருத்துவபீடங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் புதிதாக மூன்று மருத்துவ பீடங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளியாப்பிடிய வயம்ப பல்கலைக்கழகத்திலும் சப்ரகமுவ மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகங்களிலுமே மருத்துவ பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு சமாந்திரமாக குளியாப்பிட்டி, இரத்தினபுரி, பாணந்துறை ஆகிய வைத்தியசாலைகள் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி அமைச்சு ஊடாக ஏனைய கல்வித்துறை தொடர்பில் நிதி ஒதுக்கப்படுகின்றது.

“அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பாடசாலை அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றோம். மாகாண கல்வி அமைச்சிக்கூடாகவும் நிதி ஒதுக்கப்படுகின்றது. கல்வித் துறைக்கும் சுகாதாரத்துறைக்கும் இந்தளவு கூடுதல் நிதியை வரலாற்றில் முதற்தடவையாக ஒதுக்க முடிந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எமது அரசாங்கம் இந்த இரண்டு துறைக்குமே முன்னுரிமை கொடுக்கின்றது.

 ஜே. ஆர் ஜயவர்தன. ரணசிங்க பிரேமதாச. டி. பி. விஜேதுங்க ஆகிய ஜனாதிபதிகளின் அரசுகளில் நான் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளேன். அதேபோன்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் நான் பணியாற்றியுள்ளேன். அக்காலகட்டத்திலும் சுகாதாரதுறைக்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் இதுபோன்றதொரு கஷ்டமான நிலைமையில் நிதியொதுக்க முடிந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இன்று அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவடையத் தொடங்கியுள்ளது. அதனால் டொலரின் பெறுமதி அதிகரிக்கின்றது. இது ஏனைய நாடுகளின் நாணயங்களோடு ஒப்பிடுகையில் அந்த நாணயப் பெறுமதியை சீரமைத்துக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. முக்கியமாக வளர்முக நாடுகளுக்கு இது ஆரோக்கியமானதாக அமையும். இலங்கைக்கும் இந்நிலைமைக்கு முகம்கொடுக்க முடியுமென்று மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அன்று வங்குரோத்து நிலைமை அடைந்திருந்த எங்கள் நாடு இன்று வெளிநாட்டு செலாவணியாக 9 ஆயிரம் மில்லியன் டொலர் கையிருபபில் உள்ளது. இவ்வருட இறுதிக்குள் இது 11 ஆயிரம் மில்லியன் டொலராக அதிகரிக்கும். இவ்வாறு பொருளாதார முகாமைத்துவத்தின் மூலமே சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் போதுமான நிதியை ஒதுக்க முடிந்துள்ளது. அன்று பொருளாதார வீழ்ச்சி கண்டபோதே அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆட்சியைக் கைவிட்டு ஓடியது போல் நாங்கள் பின்வாங்க மாட்டோம். அன்று பொருளாதாரத்தை ஒழுங்காகச் செய்ய முடியாதவர்கள் இன்று எப்படி பொருளாதாரத்தை கட்டியெழுப்பப் போகிறீர்கள் என்று வினா எழுப்புகின்றனர்.

இது ஒரு புதுமையானதாகும். 2015 தேர்தலுக்கு முகம்கொடுக்கும் போது இந்த நாடு பொருளாதார ரீதியில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாம் ஆட்சியைப் பொறுப்பேற்று படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ளோம்.

ராஜித சேனாரத்ன போன்றதொரு சிறந்த திறமையுள்ள சுகாதார அமைச்சர் எமக்குக் கிடைத்துள்ளார். எமது பதவிக்காலத்தில் சிறந்த வாழ்க்கைத்தரத்தைக்கொண்ட நாடாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பவதே எமது இலக்காகும்.

இந்த சர்வதேச தாதியர் தின நிகழ்வின் போது இதனை உருவாக்கிய புலோரன்ஸ் நைட்டிங் கேர்ள் அம்மையாரை நாம் மறந்து விடமுடியாது. அவர் ஆரம்பித்த தாதியர் சேவை தொழிற்துறையாக மாறியுள்ளது. அவருக்கு முன்னர் பல்வேறு மதங்கள் மூலமாகவே நோயாளர்கள் பராமரிக்கப்பட்டனர். முதற்தடவையாக மதங்களுக்குப் புறம்பாக ஒரு மனித சேவையாக அந்த அம்மையாரால்தான் ஆரம்பிக்க முடிந்தது. இதுபோன்ற பல்வேறு பொதுச் சேவைகள் உலகெங்கிலும் முன்னேடுக்கப்படுவதை நாம் மறந்துவிட முடியாது. சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கூடுதலான நிதியை ஒதுக்கி் கொடுக்கடும் என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எம். ஏ. எம். நிலாம்

Author: verified_user

0 comments: