Wednesday, May 30, 2018

6 மாத குழந்தை உள்ளிட்ட குடும்பத்தை கூரிய ஆயுதத்தால் தாக்கி தானும் தற்கொலை

தனது 06 மாத குழந்தை மற்றும் மனைவி, அவரது தாய், தந்தையரை கொலை செய்யும் நோக்கில் தாக்கிய நபர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று (30) பிற்பகல் 1.35 மணியளவில், குருணாகல், பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடிகமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவி (24), மனைவியின் தாய் (42), தந்தை (62) ஆகிய நால்வரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, 6 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஏனைய மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்திய நபர் உயிரிழந்துள்ளதோடு, அவரது தலைப் பகுதி அடையாளம் காண முடியாத வகையில் சேதமடைந்துள்ளதாகவும், அவர் ஹக்க பட்டஸ் எனும் நாட்டு வெடிமருந்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட நபர், கடந்த 03 மாதங்களாக வீட்டில் இல்லாதிருந்து, வீடு திரும்பிய நிலையில் இந்த நாசகாரச் செயலை புரிந்துள்ளதோடு, அவ்விடத்திலேயே தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்தோர் தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதோடு, பிங்கிரிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: