Friday, April 6, 2018

கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பில் அரசின் செயற்பாடுகள் மிகவும் மந்தகதி

நண்பர்களுடன் பகிர
ஐரோ. பாராளுமன்ற குழுவிடம் இரா.சம்பந்தன்
அரசியல் கைதிகள் விடுதலை, நிலைமாற்றுக்கால நீதிப் பொறிமுறைகளை அமுல்படுத்துதல், படைவசமுள்ள காணிகள் விடுவிப்பு விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிக மந்தகதியிலேயே இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றஆறுபேர்கொண்டகுழுவினர் ​ எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், முன்னைய அரசாங்கம் ஜனநாயக பண்புகளிலிருந்து விலகியதன் காரணமாவே தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது என்றும், இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும், கருமங்கள் மிக மந்த கதியிலேயே இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி சமூகங்களுக்கிடையில் சுமூகநிலைமையை கொண்டுவருவதற்கு இணக்கப்பாட்டை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதிகாரப்பகிர்வு தொடர்பில் விளக்கமளித்த இரா.சம்பந்தன், குறிப்பிட்ட பிரதேசங்களில் பல நூற்றாண்டுகளாக வாழும் மக்களின் சுயமரியாதை, கெளரவம், மற்றும் இறைமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருமித்த பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் ஒரு தீர்வையே நாம் வேண்டிநிற்கிறோம் என்றும் இதனை பூர்த்தி செய்வதற்கு அரசியல் யாப்பை உருவாக்கும் கருமங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விரைவான ஒருதீர்வை எட்ட வேண்டும் என்றும் கூறினார்.
புதிய அரசியல் யாப்பில் மக்கள் தமது கருமங்களை தாமே முன்னெடுக்கக்கூடிய வகையில், அதிகாரங்கள் பகிரப்படுவதையும், அத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப்பெற முடியாத வகையிலும், மத்திய அரசு அந்த அதிகாரங்களில் தலையிட முடியாத வகையிலுமான ஒரு கட்டமைப்பையே எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்த இரா.சம்பந்தன், இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் மிகவும் நியாயமான வகையிலேயே செயற்படுகிறோம் என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த கருமங்களை அரசாங்கம் செய்யத் தவறும் பட்சத்தில் எம்மத்தியிலுள்ள தீவிர செயற்பாட்டாளர்களுக்கு அது ஓர் உந்து சக்தியாக அமைவதோடு நாமும் மிகக் கடுமையான ஒருநிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம் எனவும் வலியுறுத்தினார்.
உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், தமிழ்மக்கள் இந்த நாட்டில் இரண்டாந்தர மக்கள் குழுவாக பார்க்கப்படுவதன் நிமித்தம் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகி வேதனையடைந்தவர்களாக மட்டுமல்லாது, நிந்திக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தர்ப்பங்களையும் எடுத்துரைத்தார். இவற்றினால் இந்நாட்டில் தொடர்ந்தும் வாழமுடியாது என்ற நிலைப்பாட்டில் அநேக தமிழ்மக்கள் இந்நாட்டை விட்டு வெளியேறி உலகின் பலபாகங்களிலும் வாழ்ந்து வருவதாகவும், இந் நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் வலியுறுத்திய இரா. சம்பந்தன், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் காட்டப்படுகின்ற நீண்ட தேவையற்ற இழுத்தடிப்புக்கள் தொடர்பில் தமது அதிருப்தியை தெரிவித்த இரா. சம்பந்தன், இந்தச் சட்டம் நீக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து உறுப்பினர்களை தெளிவுபடுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பல கைதிகள் எந்தவொரு விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறைகளில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அத்தனை பேரும் மேலும் தாமதங்களின்றி விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிலைமாற்று கால நீதிப்பொறிமுறைகள், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்களிலும் அரசாங்கத்தின் செயற்பாடு மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்திய இரா. சம்பந்தன், இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேசத்தின் ஆதரவு நிபந்தனைக்குட்பட்டது என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எனவே இலங்கை அரசாங்கம் தனது கடமையை செய்யவேண்டும் எனவும் அதிலிருந்து விலக முடியாது எனவும் தெரிவித்தார். சர்வதேச சமூகம் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளதையும் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
இரா. சம்பந்தனின் விவேகமான இராஜதந்திர நடைமுறை யதார்த்தமான தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் கருத்துக்களுக்கு தாம் மிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் தமது சொந்த நாட்டு அரசாங்கங்களுடனும் ஐரோப்பிய ஒன்றியத்தில் எடுத்துரைப்பதாகவும் உறுதியளித்தனர். 
நண்பர்களுடன் பகிர

Author: verified_user

0 comments: