Thursday, December 7, 2017

மாற்றுக் கூட்டணி வடக்கில் உதயம்

நண்பர்களுடன் பகிர
ஏனைய கட்சிகள், அமைப்புக்களுக்கும் அழைப்பு
(எம்.நியூட்டன்)
தமிழர் விடுதலைக்கூட்டணி யின் சின்னமான உதய சூரியன் சின்னத்தின் கீழ் வடக்கில் புதிய கூட் டணி நேற்று உருவாக்கப்பட்டது.  
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்  னணி (ஈபி.ஆர்.எல்.எப்.) உட்பட கட் சிகள் பொது அமைப்புக்களை உள்ளடக்கிய இந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  நேற்று கைச்சாத்திடப்பட்டது. தமது புதிய கூட்டணியில் ஏனைய கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணை வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக தமிழரசுக் கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன், ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) தலைவர் ஏ.ஆர்.அருள்பிரகாசம், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் சாந்தலிங்கம் கோவியராசா ஆகியோர் கலந்துகொண்டதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது குறித்து மேற்படி கட்சிகளின் தலைவர்கள் தமது நோக்கங்கள் கொள்கைகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன் கொள்கைப் பிரகடனங்களையும் வெளியிட்டனர்.
குறித்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்கள் தாம் தேர்ந்தெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களால் தாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, மக்கள் கொடுத்த ஆணையை மறந்து அரசின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றி, உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் அரசைப் பாதுகாக்கும் ஒரு கட்சியாக தமிழரசுக் கட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. சமஷ்டி என்பதற்கு இடமே இல்லை. ஒற்றையாட்சிதான் முடிவு; சமஷ்டி கிடையாது என ஜனாதிபதியும் பிரதமரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வலியுறுத்திக்கூறிய பிறகு இடைக்கால அறிக்கை என்பது சமஷ்டியைக் கொண்டது என தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இந் நிலையில் அரசியல் சாசன வழிநடத்தல் குழு அமர்வுகள் எழுபத்துமூன்று முறை கூடியபொழுதிலும் அதில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றி பேசாது, வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்று கூறிவரும் சூழ்நிலையிலும் வடக்கு,- கிழக்கு உட்பட முழு இலங்கையிலும் பௌத்தத்திற்கு முதலிடம் என்ற விடயத்தை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ள சூழ்நிலையில், மாற்று அணி ஒன்றின் தேவை மக்களாலும் தமிழ் அரசியல் கட்சிகளாலும் உணரப்பட்டது.
இன்று வெளிப்படையாகவும் பட்டவர்த்தனமாகவும் தமிழரசுக் கட்சி அரசின் வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் குறிப்பாக வடக்கு, -கிழக்கை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பல ஆயிரம் கோடி ரூபா பாதுகாப்பு செலவீனத்தை அங்கீகரித்து வாக்களித்தும் ஐ.நா. மற்றும் சர்வதேச அரங்குகளிலும் அரசைப் பாதுகாத்தும் ஆளும் ரணில், மைத்திரி அரசிற்குள் பிளவு ஏற்பட்டால் நாம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாகச் செயற்படுவோம் என்று தமிழரசுக் கட்சி வெளிப்படையாக உறுதிமொழி வழங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழர் தலைமை என்று சொல்லக்கூடிய தமிழரசுக் கட்சியானது தமிழ் மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறதா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. இவ்வாறான ஒரு நிலையில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி அந்தக் கட்சி சரியான பாதையில் செல்வதற்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிப்பதன் மூலமே மக்களின் மன உணர்வுகளை அவர்களுக்குப் புரியவைக்க முடியும். தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு பலமான பொதுக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கொள்கையுடனான ஒற்றுமையே தேவை
விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட நிலையில், தமிழர்களின் ஒருமித்த குரல் மற்றும் ஒருமித்த போராட்டத்தினூடாகத்தான் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நிலையில், பல்வேறுபட்ட கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தன. ஆனால் தமிழரசுக் கட்சியின் தவறான கொள்கைகளால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி போன்ற கட்சிகள் அதிலிருந்து வெளியேறின. கூட்டமைப்பு என்ற பெயரைப் பயன்படுத்தி மிகவும் தவறானதும் பொய்யான முறையிலும் தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்துச் செயற்படுவதால் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை விட்டுக்கொடுக்காத புதிய கூட்டமைப்பு தேவை என்ற அடிப்படையில் ஒத்தகருத்துள்ள பல கட்சிகளும் அமைப்புகளும் கூடி உருவாக்கியதுதான் இந்தக் கூட்டமைப்பு.
புதிய தலைமையில் கைகோர்த்தவர்கள்
இந்த கூட்டமைப்பில் தமிழர் விடுதலை கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்), புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள், சமூக சமத்துவத்தினை ஊக்குவிக்கும் பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளன. மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து இக் கூட்டமைப்பில் அனைவரும் இணைய வேண்டும்.
பொதுச் சின்னமாக உதயசூரியன்
தமிழ்த் தலைவர் தந்தைசெல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியாலும் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸாலும் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தையே இப்புதிய கூட்டமைப்பு தேர்தல் சின்னமாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்த பொழுதும் உதயசூரியன் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உட்கட்சி முரண்பாடு காரணமாக இடைப்பட்ட காலத்தில் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாக இருந்தபொழுதும் மீண்டும் ஒற்றுமையின் சின்னமாக தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்தும் சின்னமாக தமிழ் மக்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தும் சின்னமாக உதய சூரியனை பொதுச் சின்னமாகநாம் அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
இணைவின் அடிப்படை
எமது முன்னாள் தலைவர்களால் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு என்பது தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான வாழ்விடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு உரித்தான சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்கப்பட்டு ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கான சுயாட்சி உருவாக்கப்படவேண்டும். அதுவே அவர்களின் பாதுகாப்பையும் தனித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரேவழி என்ற அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கையாகவும் நோக்கமாகவும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்படுகின்றது.
இந்த அடிப்படையிலேயே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதெனவும் இக்கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. எமது கொள்கைகள் மற்றும் நோக்கங்களை ஏற்றுக்கொண்ட சகல அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் சிவில் அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து பணிபுரியவருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
கடந்தகால முரண்பாடுகளை மறந்து புதிய பாதையில் பயணிக்கவேண்டிய தேவை எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. இங்கு தமிழர்களின் விடுதலையும் அவர்களின் சமூக பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்புமே முதன்மையானது. இதனை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம். மாற்றம் என்பது என்றும் நடப்பது எங்கும் நடப்பது. மாற்றம் என்பது மாறாதது. அந்தனடிப்படையில் தமிழ் மக்களுக்கும் ஒருமாற்றம் தேவை. உரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்க கிராமிய அபிவிருத்திகளை மேற்கொள்ள மாற்றம் என்பது அவசியமாகிறது. அந்த மாற்றத்தை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலிருந்து ஆரம்பிப்போம் என்றுள்ளது.
நண்பர்களுடன் பகிர

Author: verified_user

0 comments: