Thursday, May 16, 2019

தௌஹீத் ஜமாஅத் மீண்டும் தலைதுாக்க இடமளிக்கமாட்டேன்

SHARE
தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பு எந்தவகையிலும் நாட்டில் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லையென்றும் அதற்கிணங்க இராணுவம் மூன்று விதமான திட்டங்களை வகுத்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.
மேற்படி பயங்கரவாத அமைப்பை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிப்பது தொடர்பில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இராணுவத் தளபதி நேற்றைய தினம் விடயங்களை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தௌஹித் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பு மண்ணுக்காக போராடுபவர்களல்ல. அவர்கள் முற்றாக இல்லாதொழிப்பதற்கான முறைமையொன்றை வகுத்துச் செயற்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
முப்படையினருடன் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து ஏனைய பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் மூன்று விசேட நடவடிக்கைகள் மூலம் மேற்படி பயங்கரவாத அமைப்பை முழுமையாக நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற  தினத்திலிருந்து மூன்று மாத காலத்திற்காக ஒரு திட்டமும் ஏப்ரல் 21 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாதத்தை இலக்காகக் கொண்டு மற்றொரு திட்டமும் கடந்த ஏப்ரல் 21இலிருந்து இரண்டு வருடங்களை இலக்காகக் கொண்ட திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தௌஹித் ஜமாஅத் பயங்கரவாதிகளில் ஒருவராவது இந்நாட்டில் மீண்டும் தலைதூக்குவதற்கு முடியாத வகையில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதியிலிருந்து மூன்று வாரம் கடந்த நிலையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது அவர் தெளிவுபடுத்தினார்.
முப்படையினரும் இணைந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இதனால் தெளஹித் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பினால் இரண்டாவது தடவையாக தாக்குதலொன்றை நடத்த முடியாதளவில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பயங்கரவாத அமைப்பின் இரண்டாவது தாக்குதல் இடம்பெறலாமென பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் அதற்கு செவிமடுக்காமல் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு படையினரும் செயற்பட்டு வருகின்றனர்.
தம்மீது நம்பிக்கை வைத்து இயல்புவாழ்க்கையில் ஈடுபடுமாறு அவர் இதன்போது நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரின் ஒத்துழைப்புடன் மூன்று தசாப்தம் தொடர்ந்த யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது.
யுத்தம் நிறைவுற்ற 10 வருட காலம் கழிந்துள்ள நிலையில் அதனை நினைவுகூரும் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்று நடத்தப்பட்டது. இதன்போது ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பு மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு தெளிவுபடுத்தினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது இராணுவ வீரரொருவர் வன்முறையில் ஈடுபட்டவர்களை நோக்கி தமது கையைக் காட்டி சமிக்கையொன்றை செய்ததாக சில போலி வீடியோ காட்சிகள் மூலம் நாடளாவிய ரீதியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வீடியோ காட்சியைப் பார்க்கும் போது, அவ்வாறு அவர் சமிக்கை செய்ததாக அதில் காணப்படவில்லை. உண்மைக்கு புறம்பான விதத்தில் அது திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
அதில் சம்பந்தப்பட்ட இராணுவ வீரர் அவ்வாறு செயற்படவில்லை என்றும் அதன் உண்மைத்தன்மையை முழு உலகுக்கும் வெளிப்படுத்த முடியும் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 comments: