Friday, May 18, 2018

கொழும்பில் தரிப்பிட அபராதம் உடன் இடைநிறுத்தம்

நண்பர்களுடன் பகிர
கொழும்பிலுள்ள தன்னியக்க மீற்றரைக் கொண்ட வாகன தரிப்பிடங்களில் கட்டணம் செலுத்தாத நிலையில் அபராதம் அறவிடப்படுவதை உடன் இடைநிறுத்துமாறு, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

தனது, உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கில் இது குறித்து தெரிவித்துள்ள கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க, தரிப்பிட மீற்றர் அபராதம் தொடர்பில், அண்மையில் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, மாநகர சபையின் அனுமதியை எதிர்பார்த்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான அனைத்து அபராதங்களையும் இரத்துச் செய்யுமாறு, மாநகர ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தன்னியக்க மீற்றர்களுடனான தரிப்பிட தொகுதிகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய தெளிவின்மை மற்றும் அது தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து அறிந்திருக்காத காரணத்தினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்திருந்தன.

அண்மையில் வெள்ளவத்தையைச் சேர்ந்த நபர் ஒருவர், குறித்த தன்னியக்க மீற்றர் தொடர்பான போதிய அறிவின்மை காரணமாக, தனது தரிப்பிட சேவைக்கான கட்டணமான ரூபா 30 இனை செலுத்துவதற்கு யாரும் இல்லாத நிலையில் அங்கிருந்து சென்றுள்ளார். இதன் காரணமாக 13 நாட்களுக்கு பின்னர் அவருக்கு ரூபா 10,120 அபராதத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

குறித்த நபர் இவ்விடயம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில், இவ்விடயம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் மீள் வடிவமைக்கப்பட்ட தொகுதி மற்றும் அபராத கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் மாநகர அமர்வில் கலந்தாலோசித்துள்ளதாக, கொழும்பு மாநகர உறுப்பினர் மிலிந்த ராஜபக்‌ஷ, கடந்த மே 15 ஆம் திகதி தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, கொழும்பு மாநகர சபையானது, தனியார் பங்களிப்புடன், கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வாகன தரிப்பிடங்களை நிர்வகிக்க, டெனகா கார் பார்க்ஸ் தனியார் நிறுவனத்துடன் (Tenaga Car Parks (Pvt) Ltd) ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டிருந்தது. அதன் அடிப்படையில் குறித்த நிறுவனம், வாகன தரிப்பிட மீற்றர் மற்றும் அபராதம் அறிவிடல் தொடர்பில் முகாமைத்துவம் செய்வதற்கான உரிமையை பெற்றுள்ளது.

குறித்த நிறுவனம், காலி வீதியிலிருந்து (கலதாரி ஹோட்டல் சந்தியிலிருந்து தெஹிவளை பாலம்) மற்றும் ஆர்.ஏ. டி மெல் மாவத்தை (லிபர்டி பிளாஷா முதல் தர்மாராம வீதி) மற்றும் அப்பகுதியிலுள்ள அனைத்து உள்ளக வீதிகள் தொடர்பிலான வாகன தரிப்பிட சேவையை முகாமைத்துவம் செய்து வருகின்றது.
நண்பர்களுடன் பகிர

Author: verified_user

0 comments: