Wednesday, May 30, 2018

பொறுப்பற்று நடந்த உத்தியோகத்தரை இடமாற்றுமாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நண்பர்களுடன் பகிர
உன்னிச்சை குளத்தில் இருந்து நீரைத்திறந்து விட்டு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்ட நீப்பாசனத் திணைக்களத்தின் அனுபவமற்ற உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யுமாறு கோரி மட்டக்களப்பு உன்னிச்சை விவசாயத் திட்டத்திலுள்ள பெருமளவிளான விவசாயிகள் இன்று (30) புதன்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட மொன்றில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்திற்கருகில் ஒன்று சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்ட பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மட்டக்களப்பு உன்னிச்சை குளத்திலிருந்து கடந்த 25 ஆம் திகதி நீரைத் திறந்து விட்டு முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் வலியுறுத்தினர்.
கடந்த 25 ஆம் திகதி மட்டக்களப்பு உன்னிச்சை குளத்திலிருந்த 15 அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த 15 அடி நீர் ஒரே தடவையில் திறந்து விடப்பட்டதால் உன்னிச்சை நீர்ப்பாசன விவசாயத்திட்டத்திலுள்ள 6,000 ஏக்கர் விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நடடிக்கையானது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுபவமற்ற ஊழியர் ஒருவரினால் இடம்பெற்றது.
நீர் தேவையான நேரத்தில் உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்படாமல் தேவையற்ற நேரத்தில் ஒரே தடவையில் 15 அடி திறந்து விடப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்ட நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உத்தியோகத்தரின் மீது விசாரணை நடாத்தி உடனடியாக இடமாற்றம் செய்வதுடன் இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவாசயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதில் விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் தமது கோரிக்கைகளடங்கிய மகஜரொன்றையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமாரிடம் கையளித்தனர்.
நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாய நீர் முகாமைத்துவக் குழுவுடன் பேசி  நீரை திறந்து விட்டிருக்க வேண்டும். இது ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
மட்டக்களப்பு மாவட்ட உன்னிச்சை நிர்ப்பாசன விவசாயிகளுக்கு தறபோதைய நீர்ப்பாசன உயர் அதிகாரியின் தன்னிச்சையான நடவடிக்கையால் ஏற்பட்ட அவல நிலைக்கு திர்வு தரவேண்டுமெனவும் குறித்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்) source thinakaran  
நண்பர்களுடன் பகிர

Author: verified_user

0 comments: