Wednesday, April 18, 2018

ஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு சோ தான் காரணம்.....

SHARE
2011 ஆம் ஆண்டில் போயஸ் கார்டனிலிருந்து என்னை வெளியேற்றியதற்கு நடிகரும் பத்திரிக்கையாளருமான சோ காரணமாக இருந்தார் என விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அந்த பிரமாண பத்திரத்தில் சசிகலா தெரிவித்திருப்பதாவது...

‘2011ஆம் ஆண்டு மத்தியில் கட்சியில் சில சீரமைப்பு நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொண்டார். அந்த நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் கொடுத்தனர். இந்த நேரத்தில் ஜெயலலிதா இதுசம்பந்தமாக பத்திரிகையாளர் சோவிடம் பேசினார்.

அதன்பிறகு நான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். அப்போது ஜெயலலிதா என்னிடம் கூறும்போது, "சோ என்னிடம் சில தகவல்களை கூறியிருக்கிறார். அது என்ன என்பது பற்றி பின்னர் உனக்கு சொல்கிறேன். அதுவரை நீ தி.நகரில் உள்ள வீட்டில் தங்கியிரு" என்று கூறினார். அதன்படி நான் தி.நகரில் உள்ள வீட்டில் போய் தங்கினேன்.
பின்னர் குறுகிய காலத்தில் மீண்டும் என்னிடத்தில் தொடர்பு கொண்ட ஜெயலலிதா உன்னைப் பற்றி எனக்கு வந்த தகவல் அனைத்துமே தவறானது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே மீண்டும் போயஸ் கார்டனுக்கு வந்துவிடு என்று கூறினார். அதன்படி 2012ஆம் ஆண்டு  மார்ச் மாதம் நான் போயஸ்கார்டன் திரும்பினேன்.
அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக நடந்த உறவினர்கள் யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கடிதம் எழுதி கொடுத்தேன். சோ, ஜெயலலிதாவுக்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த கடிதம் எழுதப்பட்டது. 
நான் ஒருபோதும் அரசியல் மற்றும் நிர்வாக வி‌ஷயங்களில் தலையிட்டதில்லை. ஜெயலலிதாவே அனைத்து தரப்பினரையும் அழைத்து நேரடியாக ஆலோசனை நடத்துவார். ஜெயலலிதா தெரிவிக்க சொல்லும் தகவல்களை மட்டும் இரண்டாம் நிலை தலைவர்களுக்கு நான் தெரிவிப்பேன்.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. நான் எனது உறவினரான வைத்தியர் கே. சிவக்குமாரை அழைத்தேன். அவர் வந்து பார்த்துவிட்டு ஜெயலலிதாவின் இரத்தம், சிறுநீர் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்தார்.
செப்டம்பர் 22ஆம் திகதி அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. எனவே அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் வைத்தியர் கள் கூறினார்கள்.
நான் இதுபற்றி ஜெயலலிதாவிடம் சொன்ன போது, நான் சற்று தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகி விடும். இப்போது வைத்தியசாலைக்கு செல்வது தேவையற்றது என்று கூறினார்.
இரவு 9 மணி அளவில் வைத்தியர் சிவக்குமார் மூன்றாவது தடவையாக வீட்டிற்கு வந்தார். இரவு 9.30 மணி அளவில் ஜெயலலிதா சாப்பிட்டு விட்டு பல் துலக்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென என்னை அழைத்தார். ‘சசி எனக்கு மயக்கம் வருகிறது. உடனே ஓடி வா’ என்று கூறினார்.
நான் ஓடிச்சென்று அவரை படுக்கையில் படுக்க வைத்தேன். உடனேயே அவர் மயங்கி விழுந்து விட்டார். வைத்தியர் உடனே அறைக்கு வந்து அவரது காலையும், கையையும் தேய்த்துவிட்டு உஷ்ணம் ஏற்படுத்த முயன்றார். மேலும் உடனடியாக அப்பல்லோ வைத்தியசாலையில்  அவசர பிரிவுக்கு தகவல் அனுப்பினார்.
அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதற்கு பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எழுந்து நடந்தார். டிசம்பர் மாதம் 29ஆம் திகதி அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 4ஆம் திகதி அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மறுநாள் அவர் இறந்ததாக வைத்தியசாலையில் அறிவித்தனர்.’ என்று அந்த பிரமாண பத்திரத்தில் சசிகலா தெரிவித்திருக்கிறார்.
SHARE

Author: verified_user

0 comments: