Tuesday, March 27, 2018

சொகுசு வாகனங்கள், புலிகளின் கப்பல் ஆழ்கடலில் அழிப்பு

SHARE
விசேட உத்தரவின் பேரில் கடற்படை நேற்று நடவடிக்கை
ஜனாதிபதிகள் உட்பட விஷேட பிரமுகர்கள் பயன்படுத்திய குண்டு துளைக்காத எட்டு அதிசொகுசு வாகனங்கள் மற்றும் புலிகளிடம் கைப்பற்றப்பட்ட கப்பல் ஒன்றும் நேற்று ஆழ்கடலில் மூழ்கடிக்கச் செய்து அழிக்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பேரில் இலங்கை கடற்படையினரால் இவை நேற்றுக் காலை ஆழ்கடலில் மூழ்கடிக்கச் செய்யப்பட்டதாக கடற்படையின் பதில் ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் கே. கே. சி. உதயங்க தெரிவித்தார்.
இலங்கையின் மேற்கு கடற்பரப்பின் ஆழ்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டே அனைத்து சொகுசு வாகனங்களும் கப்பலும் மூழ்கடிக்கச் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் :- யுத்த காலத்தில் ஜனாதிபதி உட்பட விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட குண்டுத் துளைக்காத அதிசொகுசு வாகனங்கள் தற்பொழுது பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் அவற்றை திருத்த பாரிய செலவு ஏற்படுவதனாலும் ஏலத்தில் விற்பனை செய்ய முடியாதமை யினாலும் அந்த வாகனங்களை அழிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வாகனங்களை எவரும் மீள எடுத்து பயன்படுத்த முடியாத வகையில் அழிக்க வேண்டும் என்பதால் அதில் பொருத்தப்படிருந்த பெறுமதியான உதிரிப்பாகங்கள் மற்றும் தொலைத் தொடர்பு கருவிகள் அகற்றப்பட்ட பின்னர், அவை உலகில் நடைமுறையில் உள்ள விதத்தில் ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, விடுதலைப் புலிகள் தமது கடல்வழி தொடர்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்த நிலையில் யுத்தத்திற்கு பின்னர் இந்தோனேஷியாவில் வைத்து கைப்பற்றப்பட்டு இலங்கை கடற்படையின் பொறுப்பில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில் பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் போன ஏ 522 என்ற வெலின் என்றழைக்கப்படும் கப்பலும் இவ்வாறு நேற்றைய தினம் மூழ்கடிக்கப்பட்டன.
மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகிய வற்றின் உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே மேற்படி கப்பல் இழுத்துச் செல்லப்பட்டு நீர் நிறப் பப்பட்டு ஆழ்கடலில் மூழ்கடிக்கச் செய்யப்பட்டுளளது. மேற்படி கப்பலை இரும்பு விலைக்கு ஏலத்தில் விற்க கோரப்பட்ட போதிலும் குறைந்த விலைக்கு கோரப்பட்டமையினால் மேற்படி கப்பலையும் அழிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஸாதிக் ஷிஹான்
SHARE

Author: verified_user

0 comments: