Friday, March 23, 2018

காணாமல் போனோரின் உறவுகளை யாழில் ஜனாதிபதி சந்திப்பு

SHARE
காணாமல்போனோரின் உறவுகளை  ஜனாதிபதி சந்திக்காமலேயே சென்றார்   என்பதில் எதுவித உண்மையும் இல்லை என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  
அருட்தந்தை எம். சக்திவேல் தலைமையில் கடந்த 19 ஆம் திகதி சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
யாழ். சென். பற்றிக் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கல்லூரி வளாகத்தில் காணாமல்போனோரின் உறவினர்கள் சந்தித்தனர். 
இத் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, காணாமல்போனோரைக் கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். 
நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர் தம்மை சந்திப்பதற்காக முன்னறிவித்தலின்றி புனித பத்திரிசியார் கல்லூரியின் வளாகத்திற்குள் வருகை தந்திருந்த அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட காணாமல் போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்ததோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சட்டதிட்டங்களுக்கமைய காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகத்தினூடாக நியாயமான தீர்வுகள் அவர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன்போது தெரிவித்தார். 
மேலும், அன்றைய தினம் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு காணாமல்போனோரின் உறவினர்களால் ஏற்கனவே வேண்டுகோள் எதுவும் விடுக்கப்பட்டிராத நிலையிலேயே இந்த சந்திப்பிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.  
ஆயினும் காணாமல் போனோரின் உறவினரை சந்திப்பதற்காக  ஜனாதிபதி, நேரத்தை ஒதுக்கிவிட்டு, அவர்களை சந்திக்காமலே சென்றுவிட்டார் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்பதோடு, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதற்காகவும், ஜனாதிபதி மீது அவதூறு பரப்புவதற்காகவும் இச்செய்தி திட்டமிட்ட முறையில் விசமிகள் சிலரால் பரப்பப்பட்டு வருவதாகவும்ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  
SHARE

Author: verified_user

0 comments: